Tuesday, January 4, 2011

தமிழ் சினிமாவின் தறுதலை ஹீரோக்கள்...!

வேலையில்லாத வயிற்றெரிச்சலில் பதிவெழுத உட்கார்ந்தால் இதுபோன்ற பதிவையெல்லாம் எழுதத் தோன்றுகிறது. சமீபகாலமாக தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் ஹீரோ கதாப்பாத்திரமே எனது இந்த சமூகக்கோபத்திற்கு காரணம். இப்பொழுதெல்லாம் தமிழ் சினிமாக்களில் ஹீரோவிற்கு இரண்டே விதமான கேரக்டர்கள் தான். ஒன்று, சிட்டியில் வேலைவெட்டியில்லாமல் சுற்றிவரும் கேரக்டர். இன்னொன்று, கிராமம்களில் சண்டித்தனம் பண்ணிக்கொண்டு திரியும் கேரக்டர். இதற்கெல்லாம் விதிவிலக்காக அவ்வப்போது சில நல்ல திரைப்படங்களும் வருகிறது. ஆனால் நம் தமிழ் சினிமா ரசிகர்கள் அன்னப்பறவையை போன்ற மேன்மையான குணம் கொண்டவர்கள். சினிமாவில் இருந்து கெட்ட விஷயங்களை மட்டும் உறுஞ்சி எடுத்துக்கொண்டு நல்ல விஷயங்களை எல்லாம் தூக்கி கடாசிவிடுவார்கள்.

பொதுவாக ஹீரோவின் பாத்திர படைப்பு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம் :-
·          ஹீரோ ரொம்ப அசால்ட். யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படமாட்டார்.
·          ஹீரோவின் அப்பா எப்போதும் ஹீரோவை திட்டிக்கொண்டே இருப்பார். ஆனால் ஹீரோ அவரையும் மதிக்காமல் வெறுப்பேற்றும் விதமாகவே செயல்படுவார்.
·          ஹீரோவின் அம்மா ரொம்ப பாசக்கார அம்மா கூடவே கொஞ்சம் லூசாகவும் இருப்பார். அப்பா கேரக்டர் ஹீரோவை அசிங்க அசிங்கமாக திட்டிக்கொண்டிருக்கும்போது சலனமே இல்லாமல் இடையில் புகுந்து ஹீரோவிற்கு ஹார்லிக்ஸ் கொடுப்பார்.
·          ஹீரோவிற்கு தங்கை, தம்பி, அண்ணன், அக்கா, அண்ணி போன்ற கேரக்டர்கள் அவ்வப்போது காமெடிக்காகவும் பொழுதுப்போக்கவும் வந்துசெல்வார்கள்.
·          ஹீரோவை யாராவது இரும்புக்கம்பியால் இருபது முறை பின்மண்டையில் அடித்தால் கூட ஹீரோ எழுந்து வந்து வில்லன் கும்பலை புரட்டி எடுத்து புரோட்டா போடுவார்.

·          இரண்டரை மணிநேர படத்தில் கடைசி அரைமணிநேரம் இருக்கும்போது எப்படியோ ஹீரோவிற்கு பொறுப்பு வந்து ஒரே பாடலில் பணக்காரன் ஆகிவிடுவார்.


மேற்கூறிய கேரக்டரை சில ஆண்டுகளுக்கு முன்பு மருமகப்புள்ளை தனுஷ் குத்தகைக்கு எடுத்திருந்தார். அவரது படங்கள் அனைத்திலுமே அப்பா மகனை சகட்டுமேனிக்கு திட்டுவதும் மகன் கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாமல் அதைக்கேட்டு பல்லிளிப்பது போன்ற காட்சியொன்று நிச்சயம் இடம்பெறும். தற்போது சிலகாலமாக சிவக்குமாரின் தவப்புதல்வரும் சூர்யாவின் தம்பியாண்டானும் ஆகிய கார்த்தி இந்த கேரக்டரை கவ்வியிருக்கிறார். மேலும் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாஸ் (எ) பாஸ்கரன் படத்திலும் ஹீரோவிற்கு இப்படியொரு மானங்கெட்ட கேரக்டர் தான். பாஸ் இயக்குனர் இதற்குமுன்பு எடுத்த சிவா மனசுல சக்தி படத்திற்கும் இதே அக்கப்போர் தான். ஹீரோ கேரக்டர் இப்படியென்றால் ஹீரோயின் கேரக்டர் அதற்கும் மேல. தேடிக்கண்டுபிடித்து வெட்டிப்பயலை தான் லவ்வுவார்களாம்.


பையா படத்தில் தமன்னாவும் கார்த்தியும் கட்டிப்பிடித்துக்கொள்வதோடு படம் நிறைவு பெறும். அதன்பிறகு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் தமன்னாவுடன் பன்னாடைப்பயல் கார்த்தி எப்படி குடும்பம் நடத்தினான் என்பதை யாரும் காட்டமாட்டார்கள் நாமும் யோசிக்க மாட்டோம். பாஸ் (எ) பாஸ்கரன் படத்தின் முதல்பாதியில் ஹீரோ ஒரே பாடலில் பணக்காரன் ஆவதை ஒரு காட்சியில் கிண்டலடித்து இருப்பார்கள். ஆனால் இரண்டாம் பாதியில் அங்கேயும் அதே கதைதான். கொஞ்சம் கூட படிப்பில் நாட்டம் இல்லாத மாணவர்கள் ஒரே பாடலில் மனம்திருந்தி படித்து பாசாகிவிடுவார்கள் படம் பார்ப்பவர்களை லூசாக்கிவிடுவார்கள்.

இத்தகைய செயல்களுக்கெல்லாம் திரைத்துறையினரை மட்டும் குறை சொல்லமுடியாது. குடும்பத்தோடு சினிமா பார்த்தவர்கள் எல்லாம் தற்போது மலிவு விலை தகடுகளில் முடங்கிவிட திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் முன் இருக்கையில் கால்களை போட்டுக்கொண்டு பான்பராக்கை வாயில் குதப்பிக்கொண்டு திரியும் சைனா மொபைல் கும்பல்தான். இவர்களால் தான் நல்ல படங்களெல்லாம் வந்த வேகத்தில் திரும்பிவிடுகின்றன. மிஷ்கினின் நந்தலாலா இதுவரை ரிலீஸ் ஆகாதது கூட இதுபோன்ற கலரிங் ம(ண்)டையர்களால்தான்.

யார் என்ன சொன்னாலும் தமிழ் சினிமா திருந்தப் போவதில்லை. இனி திருந்த வேண்டியது நாம் தான். இனியாவது வெட்டி ஆபிசர் ஹீரோக்களை ரசிப்பதை நிறுத்திவிட்டு போய் அவங்கவங்க புள்ளக்குட்டிங்களை படிக்க வைப்போம்.

No comments:

Post a Comment